புது அணுகுமுறை : இறுதிக்கட்ட காய் நகர்த்தல்கள்

புது அணுகுமுறை : இறுதிக்கட்ட காய் நகர்த்தல்கள்
Published on

நீண்டகாலமாக தமிழக அரசியலைக் கவனித்து வருகிறவர்களுக்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் நம்ப முடியாததாக இருந்திருக்கும். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்து நலம் விசாரிக்க அதிமுக கட்சியின் சார்பாக தம்பிதுரையும் ஜெயகுமாரும் வந்துசென்ற சம்பவம்தான் அது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது திமுக சார்பில் ஸ்டாலின் சென்று வந்தார். கலைஞரின் துணைவியார் ராசாத்தி அம்மையாரும் போய்வந்தார். ஆனால் அதிமுக இந்த நிகழ்வுகளுக்கு ஆக்கபூர்வமான மறுவினை ஆற்றுமா என்பது அக்கட்சியைப் பொறுத்தவரை யாரும் எதிர்பார்க்க முடியாதது. ஆனாலும் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது. ஜெயலலிதா என்ற வலிமையான தலைவரின் மரணம் என்பது மாபெரும் வெற்றிடத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தியதுடன் அரசியல் சூழலை ஒரு புதிய மாற்றத்துக்காகவும் தயார்ப்படுத்தியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.­­­­­

அதிமுக என்கிற கட்சி உருவாகக் காரணமாக அமைந்தது எந்த கொள்கைச்சிக்கலோ மக்கள் பிரச்னைக்கான போராட்டமோ இல்லை.  இரு ஆளுமைகளுக்கு இடையிலான உரசல்தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.  மு.கருணாநிதியுடன் அவரது நீண்டநாள் நண்பராகவும் அண்ணாவுக்குப் பின்னர் அவர் முதல்வர் நாற்காலியில் அமரவும் ஆதரவு அளித்த  எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட உரசல். இந்த மோதல் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தமிழக அரசியலைத் தீர்மானித்தது. இந்த இருதுருவ அரசியல் ஒருவிதத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் சாபக்கேடாகவும் இருந்தது என்று விமர்சகர்கள் கருதினாலும் அதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது.

1977-ல் எம்ஜிஆர் முதல்வர் ஆனபின்னரும் அதற்கு முன்னால் கட்சி தொடங்கியபோதும் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையில் இருந்தது பரஸ்பர வெறுப்பால் ஆன அரசியல் உறவுதான்.

சட்டமன்றங்களில் கடும் மோதல். நேருக்கு நேர் விழாக்களில்கூட சந்திப்பு இல்லை. ஒருவர்  வரும்போது இன்னொருவர் அங்கே இருக்கமாட்டார். மிக அரிதாகத்தான் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். கட்சியில் மேல்மட்டத்தில்  நிலவிய முறுகல், கீழ்மட்டத் தொண்டர்கள் வரை நீடித்தது.

எம்ஜிஆர் உடல் நலிவுற்றபோது கருணாநிதியின் குரலில் கனிவு ஏற்பட்டது. பின்னர் எம்ஜிஆர் திடீரென மரணம் அடைந்தபோது விடியற்காலையில் யாரும் கூடுவதற்குமுன்பே கருணாநிதி சென்று மலர் வளையம் வைத்துவிட்டு வந்தார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. 

13 ஆண்டுகள் கழித்து 1989-ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். இதற்கிடையில் அதிமுகவில் இடையில் ஏற்பட்ட சில மாத தொய்வுக்குப் பின்னர் அக்கட்சி மீண்டும் ஜெயலலிதாவின் கீழ் ஒருங்கிணைந்தது. பழைய எம்ஜிஆர்- கருணாநிதி  மோதலை அவரும் தொடர்ந்தார். ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழல் இந்த மோதலை மேலும் வலுக்கச் செய்தது. சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி பட்ஜெட் வாசிக்கையில் ஏற்பட்ட நேரடி கைகலப்பு, 

 ஜெயலலிதா மீதான மோசமான தாக்குதலாக மாறி இரு கட்சிகளும் எதிரணியினர் என்ற நிலையில் இருந்து எதிரி அணியினர் என்ற நிலைக்கு மாறும் மிகமோசமான எதிர்முனை உருவானது.

 பரஸ்பரம் ஒருவரையொருவர் கைது செய்துகொண்டனர். வழக்குகள் தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து இரு கட்சிகளும் இரு முனைகளில் நின்று செயல்பட்டன. கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்த நிகழ்ச்சியிலும் சந்தித்ததே இல்லை.

சட்டமன்றத்திலும்கூட ஒருவர் இருக்கும்போது இன்னொருவர் அவையைப் புறக்கணிப்பார். மிக அரிதாகவே இருவரும் ஒரே நேரத்தில் அவையில் இருந்தனர். கருணாநிதியை எப்போதும் தீயசக்தி என்று கூறுவதையே ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிமுக, திமுக இரு கட்சிப் பேச்சா ளர்களும் மேடைகளில் வாயைத் திறந்தால் வசை மாரி பொழிவதுதான் வரலாறு.

பல ஆண்டுகளுக்கு முன்பாக திமுக- அதிமுக இரு கட்சிகளையும் இணைக்க ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. கட்சிப்பொறுப்பை கருணாநிதியும் ஆட்சிப்பொறுப்பை எம்ஜிஆரும் பார்த்துகொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் அதை எம்ஜிஆர் ஏற்க மறுத்துவிட்டார். இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் அது கருணாநிதி- எம்ஜிஆர் இருவருமே

சேர்ந்து எடுத்த கூட்டு முடிவாகக்கூடத் தோன்றலாம். இருவரும் இணையாமல் எதிர் அரசியல் செய்ததன் விளைவாகத் தான் தமிழகத்தின் பெரும்பாலான வாக்கு வங்கி இந்த  இரு கட்சிகள் இடையே மட்டும் இருந்தது, வேறு புதிய கட்சியோ தலைவரோ தோன்ற முடியவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தேய்ந்தது. பாஜகவுக்கு வளர்ச்சியே இல்லை. இது ஒருவிதத்தில் இரு கட்சிகளுக்குமே வசதியாகவே இருந்தது என்பதே நுட்பமான பின்னணி.  தமிழ்நாட்டில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று வெறுத்து அரசியல் செய்தாலும்கூட, தங்களை அன்றி வேறு கட்சிகள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தன. பிற கட்சிகள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இருகட்சிகளுக்கும் இடையே ஒரு சொல்லப்படாத புரிதல் இருப்பதையும் கூர்ந்து கவனித்தால் உணரலாம். இந்த வெறுப்பு அரசியல் மாநிலத்தின் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதிலும் ஒரு கவசமாக இரு கட்சிகளுக்கும் இருந்தது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக -திமுக இருகட்சிகள்தான் தமிழ்நாட்டில். அவைகளைச் சார்ந்து இயங்காத வேறு எந்த கட்சிகளுக்கும் இடமே இல்லை என்று துடைத்து எறிந்தது. இது ஒருவிதத்தில் இரு கட்சிகளுக்கும் வெற்றி. அதே சமயம் ஜனநாயகத்துக்கு மாற்றுக்குரல்கள் வரமுடியாத இழப்பு.

இது ஒரு புறம் இருக்கட்டும். பரஸ்பர வெறுப்பில் உருவான இந்த இரு துருவ அரசியலின் மோசமான பக்கம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறிச் செயல்படுவதற்கான வாய்ப்பையே தரவில்லை. பொதுவான மாநிலப் பிரச்னைகளில் கூட ஒரே அணியில் திரளமுடியவில்லை.

கர்நாடகாவிலும் கேரளத்திலும் மாநில நலன்களுக்காக எதிர்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. கட்சித் தலைவர்கள் ஒன்றாக சந்தித்துப் பேசுகிறார்கள். ஒன்றாகப்  பயணம் மேற்கொள்கின்றனர். ஜெயலலிதாவின் மரண அஞ்சலிக்கு கேரளத்தின் முதல்வர் பிணராயி விஜயனும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் ஒன்றாகவே வந்து சென்றனர்.

கருணாநிதிக்கும்  ஜெயலலிதாவுக்கும் இடையே எதிர்ப்புணர்வு என்ற சுமை இருந்தாலும் மு.க. ஸ்டாலினுக்கு அந்த சுமை இல்லை. அவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சந்தித்து திமுக சார்பில் சுனாமி நிவாரண நிதி அளித்தார். அவரது பதவி ஏற்பு விழாக்களில் கலந்துகொண்டார். 2016-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றபோது ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்காக ஜெயலலிதா வருத்தம் தெரிவித்திருந்தார்.

இன்று ஜெயலலிதா என்கிற ஒரு துருவம் இல்லை. இன்னொரு துருவமாக இருக்கிற கருணாநிதியும் முதுமையின் பிடியில் இருக்கிறார். இருதுருவ அரசியல் மறைந்து பல்துருவ அரசியல் தமிழ்நாட்டில் முகிழ்க்கும் வாய்ப்பு தொலைவானத்தில் தெரிகிறது. உண்மையில் அது உருவாகுமா? அப்படி உருவானால் அது தமிழ்நாட்டுக்கு நன்மைகளைத் தருவதாக அமையுமா?

இந்த கேள்விகள் ஒரு புறம் இருக்க, ஜெ., கலைஞர் - இருவரின் விலகலால் தமிழக அரசியலில் ஏற்படுகிற வெற்றிடம் இன்னொரு முக்கியமான அரசியல்போக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து நிகழ்ந்த போக்கு அது. திரைப்படத் துறை சார்ந்தபுள்ளிகளே அரசியல் தலைமைகளாக உருவாகும் போக்கு. அண்ணா, கலைஞர் என இரு வசன கர்த்தாக்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு நடிகர்கள். முதல் முதலாக திரைத்துறை சாராத ஒருவராக ஓ.பன்னீர்செல்வம் இப்போது முதல்வராக இருக்கிறார். அதிமுகவிலும் அவரை மீறி திரைத்துறை சார்ந்த யாரும் தலைவராக வரும் வாய்ப்பு தெரியவில்லை. கட்சியின் லகானை கையில் வைத்திருக்கும் வி.கே.சசிகலா வீடியோ கடை நடத்தியதுதான் அவருக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு. அவர் சினிமா பார்ப்பாரா என்றுகூட யாருக்கும் தெரியாது!

மு.க.ஸ்டாலின் திரைப்படத்துறையில் சில படங்களில் தோன்றி விலகிவிட்டவர். அவர் முன்னேற்றத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அதில் சினிமா என்பது நிச்சயம் ஒரு காரணம் இல்லை. விஜயகாந்த், சரத்குமார் ஆகிய இருவருமே திரைப்படப் பின்னணி உடையவர்களே. அவர்களின் நிலையும் நம்பிக்கை தருவதாக இல்லை!

ஆகவே சினிமா கவர்ச்சியின் பின்னணியால் உருவாகும் அரசியல் ஆளுமை ஏதும் இப்போதைக்குக் கண்ணுக்குத் தெரியவில்லை.

எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகிய இருவரின் கவர்ச்சி மற்றும் ஆளுமைத்திறனின் வாரிசாக அமையும் ஒருவரே அதிமுகவை நீண்டகால நோக்கில் வழி நடத்தமுடியும். ஏனெனில் அக்கட்சி இவர்களின் சொந்த ஆளுமையால் வழிநடத்தப்பட்டது. கொள்கைகளை விட தலைமையே அங்கு பிரதான அம்சம். அப்படியொரு தலைவரை அதிமுக கண்டுகொள்ளவேண்டும். சசிகலா, பன்னீர்செல்வம் இருவரிடமும் அக்கட்சி இதையே தேடும்.  அது இங்கே கிடைக்காத பட்சத்தில் இன்னொரு எதிர்பாராத தலைமை  உருவாக வாய்ப்பு இருக்கிறது.

சாதிய ரீதியான அணிதிரட்டல்கள் தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. ஆனாலும் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்கள் காமராசரைத் தவிர அனைவருமே சிறுபான்மை சாதியினர். தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் வெகு நாட்களுக்குப் பின்பாக பெரும்பான்மை சமூகம் ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.  இதுவும் மிக முக்கியமான அம்சம்.

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தான் கண்டுவந்த அரசியல்போக்கில் முக்கியமான மாறுதல்களுக்குத் தமிழ்நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதையே இப்போது உறுதியாக சொல்ல இயலும்.

ஜனவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com